செப்டம்பர் 02, 2016 வேலை நிறுத்தம்
தமிழக அஞ்சல், RMS பகுதிகளில் மாபெரும் வெற்றி !
தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் இருந்தும் இரவு 12 மணி முதலே வேலை நிறுத்த வெற்றிச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. வேலை நிறுத்தம் அஞ்சல் , RMS, MMS, GDS, கணக்குப் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் பல கோட்டங்களில் முழுவதுமாக வெற்றி பெற்றிருக்கிறது. பல தலைமை அஞ்சலகங்கள் மூடப்பட்டுள்ளன. நூற்றுக் கணக்கான துணை அஞ்சலகங்களும் மூடப்பட்டுள்ளன.
மேலும் , இதர பகுதிகளான வருமானவரித்துறை, வங்கிகள், காப்பீட்டுத் துறை , தொலைத் தொடர்புத் துறை , மாநில அரசு ஊழியர் சங்கங்கள் , ஆசிரியர் சங்கங்கள், போக்குவரத்து ஊழியர் , திருப்பூர் , கோவை பின்னலாடைத் தொழிலாளர், ஆட்டோ-டாக்ஸி ஓட்டுநர் , நிலக்கரித் துறை , கெயில் , ஓ.என்.ஜி .சி , NTPC , OIL , HAL , ATOMIC ENERGY , BHEL, STEEL PLANT என்று நாட்டின் அத்துணை பகுதி உழைக்கும் வர்க்கமும் மத்திய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக அணி திரண்டுள்ளது ஒரு பேரெழுச்சியாகும். 18 கோடி தொழிலாளர்களுக்கு மேல் கலந்து கொண்ட மிகப்பெரும் வேலை நிறுத்தம் என்று பத்திரிகைகள் கூறுகின்றன.
இந்த செய்தி, மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிரான உழைக்கும் வர்க்கத்தின் மனநிலையை தெளிவாக அரசுக்கு எடுத்துக் கூறுகிறது. ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அமல் படுத்துதலில் அரசு தனது ஊழியர்களை ஏமாற்றியதன் வெளிப்பாடு இந்த வேலை நிறுத்தம்.
அரசுத் துறைகளில் தனியார்மயம், ஆட்குறைப்பு, ஆளெடுப்புத் தடை , தொழிலாளர் விரோத சட்டங்கள், PERFORMANCE என்ற பெயரில் தொழிலாளர்களை அடிமைப்படுத்த நினைக்கும் எதேச்சாதிகாரப் போக்கு - இவற்றிற்கு எதிரானதே இந்த வேலை நிறுத்தம்.
இந்த வேலை நிறுத்தத்தின் விளைவாக திறக்காத கதவுகள் எல்லாம் திறக்கப்பட்டன . போனஸ் உச்ச வரம்பு ரூ. 7000/- ஆக உயர்த்துதல் , அரசு ஊழியர்களுக்கு பொருந்தாது என்று கடந்த ஆண்டு கடிதம் அளித்த அதே நிதி அமைச்சர் அருண் ஜெட்லி , இப்போது சட்ட விளக்கமே பெறாமலே மத்திய அரசு ஊழியர்களுக்கு 2014- 15 நிதி ஆண்டு முதலே உயர்த்தப்பட்ட போனஸ் வழங்கிட உத்திரவு அளித்துவிட்டேன் என்று கூறுகிறார்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெறமுடியாது என்ற அதே நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, இன்று NPS இல் அனைவருக்கும் DCRG தந்துவிட்டேன் என்கிறார். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ. 350/- ஆக உயர்த்தி வழங்குகிறேன் என்கிறார். வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொள்ளுங்கள் என்று வேண்டுகிறார்.
ஆக, ஒட்டு மொத்த தொழிலாளர்களின் இந்த வேலை நிறுத்தம் முதலா ளித்துவ கொள்கைகளைக் கொண்ட ஆளும் வர்க்கத்தினரிடையே ஓர் அதிர்வலையை ஏற்படுத்தி இருப்பது நிச்சயம் புரிகிறது. அரசியல் மாச்சரியங்களைத் தாண்டி உழைக்கும் வர்க்கம் ஒன்றுபட்டால், திறக்காத இரும்புக் கோட்டைக் கதவுகள் எல்லாம் திறக்கும் என்பது புரிகிறது. இந்த வெற்றி மேலும் பெருகட்டும். அரசின் நிலை மாறாவிட்டால், அடுத்த முறை இது ஒரு பேரெழுச்சியாக மாறி நாடே அதிரும் தொடர் போராட்டமாக மாறும் என்பது நிச்சயம் . அந்த நாள் தொலைவில் இல்லை .
இந்த வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்பு வேலைகளை முழு ஈடுபாட்டுடன் தீவிரமாக செய்த அஞ்சல் RMS பகுதிகளின் மாநிலச் சங்க நிர்வாகிகள், கோட்ட / கிளை செயலர்கள் , மகிளா கமிட்டி நிர்வாகிகள் மற்றும் அனைத்து தோழர் /தோழியர்களுக்கு அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment