Thursday, November 5, 2015

போனஸ்-ன் வரலாறு

1954ல் தேசிய தபால் தந்தி ஊழியர் சம்மேளனம்(NFPTE)அமைக்கப்பட்ட பின்னர் கல்கத்தாவில் தபால்காரர் சங்க மாநாடு நடைபெற்றது. அம் மாநாட்டில் சார்பாளர் ஒருவர் ஒரு காகிதத்தில் கோரிக்கை ஒன்றை எழுதி மேடையில் இருந்த தோழர் K.G. போஸ் அவர்களிடம் கொடுத்தார். அதனை படித்த கே.ஜி. போஸ் ஒரு தோழரிடம் கொடுத்து உடனே ஒரு தீர்மானமாக எழுதித் தரும்படி கேட்டு கொண்டார். பின்னர் அது மாநாட்டு தீர்மானமாக நிறைவேற்றப் பட்டது. அந்த தீர்மானம் இதுவே: "ஒவ்வொரு ஆண்டும் துர்கா பூஜையின் போது எல்லா தபால்காரர்களுக்கும் ஒரு மாத ஊதியம் வழங்கப்பட வேண்டும். அதனை சம்பளத்தில் பிடித்தம் செய்யக் கூடாது.
இந்த கோரிக்கையை எழுப்பிய அந்த ஊழியரை பாராட்டி பேசிய கே.ஜி. போஸ், " இந்த கோரிக்கையே போனஸ் கோரிக்கையாகும். எல்லா அரசு ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்பட வேண்டும் என்ற பொருள் மிகுந்த கோரிக்கையாகும். ஊழியர்களை ஒற்றுமை படுத்தும் கோரிக்கை ஆகும்." என்று பாராட்டினார்.
1962 ல் நாக்பூரில் நடைபெற்ற NFPTE சம்மேளனக் குழு மாநாட்டில் தான் வரலாற்றில் முதல் முறையாக மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் போனஸ் என்ற தீர்மானம் தோழர்கள் N.J.ஐயர்(RMS) , சூரிய நாராயணா (TELECOM ) ஆகியோர்முயற்சியில்நிறைவேற்றப்பட்டது.
1972 அக்டோபரில் மத்திய தொழிற்சங்கங்களின் சிறப்பு மாநாடு டில்லியில் நடை பெற்றது. அதில் அரசு ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் 8.33 % குறைந்தபட்ச போனஸ் வழங்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கை. 
ரயில்வே ஊழியர் தொழிற்சங்கங்களில் ஒற்றுமை ஏற்படுத்தப்பட்டு அனைவருக்கும் 8.33 % குறைந்தபட்ச போனஸ், பொதுத்துறைக்கு ஈடான ஊதியம் முதலிய கோரிக்கைகள் முக்கியத்துவம் பெற்றன. 
போனஸ் என்பது கொடு படாத ஊதியம். வாழ்க்கை ஊதியத்தை காட்டிலும் மிகவும் குறைந்தபட்ச ஊதியத்தை கூட அடைய முடியாத நிலையில் உள்ளதால்  "அனைவருக்கும் போனஸ் " என்ற கோரிக்கையின் பின்னால் அனைத்து ஊழியர்களையும் அணி திரட்டுவது சாத்தியமானது. வாழ்க்கை ஊதியத்துக்கும், வாங்கும் ஊதியத்துக்கும் இடையில் உள்ள இடைவெளியை பூர்த்தி செய்யக் கூடிய  " கொடு படாத ஊதியம் " தான் போனஸ் என்று சாதாரண ஊழியர்களும் உணர்வு பூர்வமாக அறிந்தனர். அணி திரண்டனர். "போனஸ் என்பது பிச்சை அல்ல. இனாமல்ல. அது எங்கள் உரிமை " என்ற உணர்வு நாடெங்கும் எழுப்பப் பட்டது. இந்த சூழ்நிலையில் மற்றொரு பிரிவினர் “Bonus for All means Bonus for none “ என்ற எதிர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்களுக்கு போனசா ? ரஷ்யா போன்ற சோசியலிச நாடுகளில் கூட அரசு ஊழியர்களுக்கு போனஸ் இல்லை என்றும் கேலி பேசினர்.
1972 டிசம்பர் 10 முதல் 12 வரை  டில்லியில் கடும் குளிரில் “BONUS FOR ALL”  மற்றும் E.D. ஊழியர்கள் (இன்று  GDS) பிரச்சினைகள் குறித்தகருத்தரங்கம் நடைபெற்றது. 7 கிலோ மீட்டர் தூரம் மாபெரும் பேரணிநடைபெற்றது.  பேரணியில் கலந்து கொண்ட தொழிற்சங்க உணர்வு மிக்க தோழர்களை எதிர் அணியினர் "டில்லி ஊரை சுற்றி பார்க்க வந்த கும்பல் " என்று ஏகடியம் பேசினர்.   டில்லி கருத்தரங்கம் , பேரணி வெற்றியினை தொடர்ந்து  ஊழியர் மத்தியில் கே.ஜி. போஸ் மற்றும் தோழர்கள் என்ற BONUS FOR ALL கோரிக்கையை பிரச்சாரம் செய்தனர். மத்திய அரசு போனஸ் பரிசீலனைக் கமிட்டி ஒன்றை அமைத்தது.  1973ஜனவரி 19 அன்று " அனைவருக்கும் போனஸ் கோரிக்கை தினம்” (BONUS FOR ALL DAY) என்ற இயக்கம் நாடு முழுவதும் மிக சிறப்பாக நடைபெற்றது. ஊழியர்களை ஒற்றுமை படுத்தும் முயற்சியில் கே.ஜி. போஸ் மற்றும் அவரது சக தோழர்களும் பெரும் வெற்றி அடைந்தனர்.
1979
 ஜூலையில், மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசு கவிழும் போது சரண் சிங் பிரதமராக விரும்பினார். அவர் பிரதமராக இடது சாரிக் கட்சிகள் நான்கு முக்கிய கோரிக்கைகளின் அடிப்படையில் ஆதரவு அளித்தனர். அதில் ஒன்று போனஸ் கோரிக்கை ஆகும். 24நாட்களே நீடித்த அந்த அரசில் பெற்ற பலன்களை இன்றும் ஊழியர்கள் பெற்று வருகின்றனர். ரயில்வே ஊழியர்களுக்கு மட்டுமே போனஸ்முதலில் அறிவிக்கப் பட்டது. தபால் தந்தி ஊழியர்களுக்கும் உடனடியாக போனஸ் வழங்க வேண்டும். இல்லையெனில் வேலை நிறுத்தத்தில் ஊழியர் சங்கங்கள் ஈடுபடும் என அறிவித்தனர். அதன் பின்னர் நடை பெற்ற பேச்சு வார்த்தையில் அஞ்சல்,தொலைபேசி ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டது. தொடர் இயக்கங்களின்காரணமாக  3.11.1983 ல் தான் மற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப் பட்டது. 
1996
 ல் தேவகவுடா பிரதமராக இருந்தபோது ஊதிய உச்சவரம்பின்றி போனஸ் வழங்கப் படவேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி அக்டோபர் 23 முதல் 29 வரை 7 நாட்கள் வேலை நிறுத்தம் நடை பெற்றது. இடது சாரி கட்சிகளின் ஆதரவில் அந்த அரசு நீடிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால் அரசு அவர்களது தலையீட்டிற்கு செவி சாய்த்தது. ஊதிய உச்ச வரம்பின்றி போனஸ் என்ற கோரிக்கை நிறைவேறியது.
வெளியீடு:3 : உழைக்கும் வர்க்கம் வாசகர் வட்டம், நெல்லை மாவட்டம்.


No comments:

Post a Comment